நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவலர்கள் நடத்திய விசாரணையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரிய வந்தது.
அதனடிப்படையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்து வந்த அபிராமி , ராகுல், பிரவீன் ஆகிய மூன்று மாணவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் அபிராமி முறைப்படி நீட் தேர்வு எழுதியுள்ளார் என்பது தெரிந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார். ராகுல், பிரவீன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள், அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத்தொடர்ந்து தருமபுரி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த இர்ஃபான் என்கிற மாணவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த தகவல் வெளியானதும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
மேலும், தற்போது அவர் மொரீசியஸ் நாட்டில் பதுங்கியிருப்பதாகவும் அவரைப்பிடிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை மொரீசியஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வேலூரில் கைது செய்யப்பட்ட இர்ஃபானின் தந்தை முகமது சபியிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடியைச் சேர்ந்த வேதாசலம் என்ற நபர் இடைத்தரகர் ரசீத் என்பவரை முகமது சபிக்கு அறிமுகப்படுத்தியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து வேதாசலத்தை சிபிசிஜடி காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச்சூழலில் இர்ஃபான் பயின்ற தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்குகிறார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ?