மதுரை: தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னாண்டி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் குரும்ப கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் முப்பது லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இந்த சமூகம் உள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகத்தினருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 108 சாதிகள் பங்கிட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. இதனால் குரும்ப கவுண்டர் சமூகத்துக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநரும் ஒப்புதல் அளித்துள்ளார்.
முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகவே, வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சாதிவாரி கணக்கீடு தொடர்பான முடிவுகள் வெளிவரும் வரை நிறுத்தி வைக்கவேண்டும். அதுவரையிலும் வன்னிய சமூகத்தினருக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை நடைமுடைப்படுத்த இடைக்கால தடை விதிக்கவும் வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் இதேபோன்ற வழக்குகள் சென்னை தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் சென்னை தலைமை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஐஐடி இட ஒதுக்கீடு: அமைச்சர் பதில் திருப்தி அளிக்கவில்லை -சு வெங்கடேசன் எம்பி