இந்தியாவில், நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருக்க கோயில்கள் மூடப்பட்டன. பொது நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்கப்பட்டன.
இதன்தொடர்ச்சியாக நாளை கொண்டாடப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகளுக்கும், பல்வேறு தடைகளை அரசு விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படாத விநாயகர் சிலைகள், விதை விநாயகர் சிலைகள் என பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில், தேனியைச் சேர்ந்த ஒருவர் ஐஸ்கட்டியில் விநாயகரைச் செய்து அசத்தியுள்ளார். தேனிமாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் காய், கனிகளில் தலைவர்கள், சாதனையாளர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரின் உருவங்களை தத்ரூபமாக வரையும் திறமை படைத்தவர்.
இவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 50 கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியில் 3 அடி உயரம், 1 அடி அகலமுள்ள விநாயகர் சிலையை வடித்துள்ளார். உளியால் கல்லை செதுக்குவது போல் 30 நிமிடத்தில் ஐஸ் கட்டி விநாயகர் சிலையை செதுக்கியுள்ளார்.
ஐஸ் கட்டியில் செய்த விநாயகர் சிலை உருகுவது போல் கரோனா தொற்று கரைந்து உலக மக்கள் நன்மை பெறவேண்டும் என்ற நோக்கில் இச்சிலையை வடித்தாக இளஞ்செழியன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இயற்கையை காக்க 'விதை விநாயகர்' ஆன்லைனில் விற்பனை!