தேனி: வடகரை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சகோதரர்களான அப்துல் மற்றும் இம்ரான் கான் இருவரும் இணைந்து நேஷனல் மெடிக்கல் மற்றும் ஜெனரல்ஸ் என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் வடகரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரது மகனான புகழேந்தி தொடர்ந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த நிலையில் தாய் அவரை கண்டித்துள்ளார்.
கடந்த ஆறு மாதமாக மகன் புகழேந்தி குடிப்பழக்கம் இல்லாத நிலையில் நாள்தோறும் வீட்டிற்கு வரும்போது போதையுடனே காணப்பட்டார். இந்நிலையில் பஞ்சவர்ணம் தனது மகனை தொடர்ந்து கண்காணித்த போது, அவர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்குவதும், அதனை சாப்பிட்ட பின் போதையுடன் காணப்படுவது அவரது தாய்க்கு தெரிய வந்தது.
இதனையடுத்து பெரியகுளம் காவல் நிலையத்தில் போதை மாத்திரை விற்பது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி புகழேந்தியின் தாய் பஞ்சவர்ணம் புகார் கொடுத்துள்ளார். மேலும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கல்லூரி மற்றும் பள்ளி இளைஞர்களுக்கு போதை பொருளாக சில மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் மருந்து கடை நடத்தி வந்த அண்ணன் தம்பிகளான அப்துல் மற்றும் இம்ரான் கான் இருவரையும் கைது செய்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை போதைப் பொருட்களாக விற்பனை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: லுங்கி அணிந்து வந்தால் அனுமதி கிடையாது - தேனி திரையரங்க ஊழியர்கள் அட்டகாசம்!