தேனி: பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பயணிகளிடம் சமூக ஆர்வலரான நந்தினி மற்றும் அவரது தங்கை நிரஞ்சனா இருவரும், பெரும் முதலாளிகளுக்கு வழங்கப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த மோடி, கடனை முழுமையாக வசூல் செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றை குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்கினர்.
இதுகுறித்து தகவலறிந்த பாஜகவினர் கொடிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். சகோதரிகள் இருவரையும் கைது செய்ய வேண்டுமென்று கோஷமிட்டனர். சகோதரிகளும் பாஜகவினரை கண்டித்து கோஷமிட்டனர். காவல்துறையினர் சகோதரிகள் நோட்டீஸ் வழங்குவதையும், கோஷமிடுவதையும் தடுக்க முயற்சித்தனர். இருப்பினும் சகோதரிகள் தொடர்ந்து நோட்டீஸ் வழங்கினர்.
பின்னர் காவல்துறையினர் சமூக ஆர்வலர்கள் நந்தினி மற்றும் அவரது சகோதரி நிரஞ்சனாவை கைது செய்து தேனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நோட்டீஸ் வழங்கிய சகோதரிகளுக்கு எதிராக பாஜகவினர் கோஷம் எழுப்பியதால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜோடோ யாத்ரா..! குஜராத் மற்றும் உ.பி.யை தவிர்த்து கேரளாவில் 18 நாட்களை காங்கிரஸ் செலவிடுவது ஏன்? - கேரள சிபிஎம் செயலாளர்