வெள்ளாளர் என்ற பெயரை மாற்று சமுதாயத்திற்கும் வழங்கலாம் என்று தெரிவித்தாகக் கூறி தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் முருகன் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்களைக் கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (அக்.09) தேனியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் சரவணன், மாநில இளைஞரணித் தலைவர் ராஜா, மாநில மகளிரணித் தலைவி சகிலா கணேசன் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வெள்ளாளர் பெயரை மாற்று சமுதாயத்திற்கு வழங்கக்கூடாது என்றும், இதற்கு ஆதரவாகப் பேசி வரும் அரசியல் கட்சித் தலைவர்களைக் கண்டித்தும் கண்டன கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.
இதனிடையே தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் கூட்டம் அதிகரித்து, ஆர்ப்பாட்டகாரர்கள் சாலையின் நடுவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் கார் மீது ஏறி நின்றும், பொதுப் பேருந்துகளை மறித்தும் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே கூட்டத்தில் சிலர் கட்டையால் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கலைந்து போகுமாறு எச்சரித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் போர்க்களம் போல காட்சியளித்தது.
இதையும் படிங்க : மனைவியின் தலையை வெட்டியெடுத்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற கணவன்!