தேனி: பெரியகுளம் தென்கரை பகுதியில் நகராட்சியின் 26-வது வார்டின் காய்கறி மார்க்கெட் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்படும் அம்மா உணவகத்தால் மார்க்கெட்டில் பணியாற்றும் கூலித் தொழிலாளிகள், சுமை தூக்குவோர், அப்பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்கள் பலரின் உணவு தேவையை போக்கி வரக்கூடிய இடமாக இருக்கிறது, அம்மா உணவகம்.
மேலும் இந்த பகுதியில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி ஏராளமான பொதுமக்கள் காலை, மதியம் என இரண்டு வேளையும் நாள்தோறும் உணவு அருந்தி வருகின்றனர். இந்நிலையில் அம்மா உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீரும், பாதாள சாக்கடை கழிவு நீரும் கலந்து உணவகத்தின் வாயில் முன்பாக கடந்த 10 நாட்களாக பொங்கி வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, உணவருந்த செல்பவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் உள்ளது. மேலும் சாலையில் உணவக கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வெளியேறுவது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், 'உணவகத்தின் வாயில் முன்பாக உணவக கழிவு நீர் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இதனை மிதித்து கடந்து உணவகத்திற்குள் உணவருந்த செல்லும் கூலி தொழிலாளிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சுகாதாரமற்ற முறையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருவதால் அங்கு உணவருந்த செல்லும் மக்கள் அவதியடைகின்றனர். இதனால் அம்மா உணவகம் முன்பாக சுகாதாரமற்ற முறையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் தான் இத்தகைய நிலை நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்ஜிஆர் இடைத்தேர்தலில் வென்றது போல; ஈரோட்டிலும் அதிமுக வெல்லும்: சாவித்திரி கோபால்