தேனி: அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கம்போஸ்ட் ஓடைத்தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கால்வாய் சேதம் அடைந்து தண்ணீர் செல்லும் வழி இல்லாமல் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தேனி நகரில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி முழுவதும் சாக்கடை கழிவு நீர் தேங்கி நின்று அருவி போல் காட்சியளித்தது.
பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை தூர்வாரப்படவில்லை என்று புகார் கூறினர். நகராட்சி அலுவலகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் கூட தூய்மை பணிகள் மேற்கொள்ளாத நகராட்சி அதிகாரிகளை கண்டித்து இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் நகராட்சி அலுவலகத்துக்கு கையில் மாலையுடன் நகராட்சி ஆணையர் அறைக்கு சென்றனர். அவர் அங்கு இல்லாத காரணத்தினால் நகராட்சி அலுவலக மேலாளருக்கு இரண்டு ஆண்டுகளாக தூர்வாரததை கண்டித்து மாலை அணிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மேலாளர் அவர்களிடம் சமாதானம் செய்தார்.
பின்னர் தாங்கள் வரி செலுத்துகிறோம் எங்கள் பகுதியில் அனைவரும் நகராட்சிக்கு வரி செலுத்துகிறார்கள். நகராட்சி அருகில் உள்ள தங்கள் வார்டுக்கே இந்த நிலமை என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த பகுதிக்கு தேவையான சீரமைப்பு பணிகளை செய்து தருவதாக கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:வில்பட்டி பிரதான சாலை பணியை தரமான முறையில் அமைக்க மக்கள் கோரிக்கை