தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோம்பையைச் சேர்ந்தவர் கணேசன். கோம்பை பேரூர் கழக அதிமுக பொருளாளராக பதவி வகித்து வந்த இவர், இரண்டரை வயது பெண் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிர் காவல் துறையினர், கணேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து கணேசன் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அதில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட தேனி மாவட்டம் கோம்பை பேரூராட்சி கழகப் பொருளாளராக பதவி வகிக்கும் கணேசன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” எனக் குறிப்பிடுள்ளனர்.
மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் கைது!