தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் பால்பண்ணை தொழில் செய்து வந்தவர் குணசேகரன்(45). இவருக்கு சுதா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதே ஊரில் வசித்து வருபவர் சுதாவின் சகோதரர் பாண்டி(35). இந்நிலையில் நேற்று குணசேகரன், பாண்டி இருவரும் மது வாங்கி அருந்தியுள்ளனர்.
அப்போது இருவருக்குமிடையே போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டி, தான் வைத்திருந்த கத்தியால் குணசேகரனை மார்பில் சரமாரியாக குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த குணசேகரனை அங்கிருந்தவர்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
![கைது செய்யப்பட்ட பாண்டி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tni-01-drunking-issues-murder-script-7204333_08052020134932_0805f_1588925972_611.jpeg)
இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்விற்கான அறைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய இளைஞர் கைது!