தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த அக்பர் அலி என்பவர், தனது நண்பர்களான கணேசன் மற்றும் ராஜ்குமார் ஆகியோருடன் காரில் கேரளா மாநிலத்திற்குச்சுற்றுலா சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று (நவ.2) இரவு, இடுக்கி மாவட்டம் மறையூர் பகுதியில் உள்ள சின்னார் மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அக்பர் அலி மற்றும் அவரது நண்பர்கள் காரை விட்டு இறங்கி, சாலையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்து திடீரென காட்டுயானை ஒன்று வந்து, அங்கு நின்று கொண்டிருந்த அக்பர் அலியை தனது தும்பிக்கையால் தூக்கி எறிந்தும்; அவரை மிதித்தும் கொன்றது. இதனால், சம்பவ இடத்திலேயே அக்பர் அலி பரிதாபமாக உயிரிழந்தார்.
அக்பர் அலியை மிதித்துக்கொன்ற நிலையில் யானை அங்கு இருந்த சாலையிலேயே வெகுநேரம் நின்று கொண்டிருந்தது. இதனால் மேலும், அங்கு வாகனப்போக்குவரத்து கடுமையாகப்பாதிக்கப்பட்டது. நள்ளிரவில் சாலையை விட்டு யானை இறங்கி, வனப்பகுதியில் சென்ற பின்பு, மீண்டும் இந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது. உயிரிழந்த அக்பர் அலியின் உடல், உடற்கூராய்வுக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வனத்துறையுடன் மல்லுகட்டிய காட்டு யானை… வைரலாகும் வீடியோ