தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது டொம்புச்சேரி கிராமம். இப்பகுதியில் தேவாரம் நெடுஞ்சாலையில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 40 நாள்களுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அதன் பின்னர் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 9ஆம் தேதி முதல் மீண்டும் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்ட இந்த அரசு மதுபானக் கடையின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மதுபான பாட்டில்களை திருடிக் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் கிடைக்கப்பெற்ற காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் முக்கிய ஆதாரங்களை சேகரித்தனர்.
இதில் சுமார் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புடைய 600 மது பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மதுபானக் கடை கண்காணிப்பாளர் கருப்பையா அளித்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய காவல் துறையினர் பணியிடை நீக்கம்!