தேனி மாவட்டம் பூதிபுரம் கிராம பகுதி வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையில் இணைப்பு சாலை அமைக்கப்படாததால் 6 கிராம மக்கள் 5 கி.மீ. சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனியின் ஆதிபட்டி, பூதிபுரம், வாளையாத்துப்பட்டி, வலையப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, கெப்புரேங்கன்பட்டி ஆகிய 6 கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன. இந்த கிராமங்களுக்கு நடுவே திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இணைப்பு சாலை அமைக்கப்படவில்லை.
இதன்காரணமாக கிராம மக்கள் 5 கிலோ மீட்டருக்கும் மேல் சுற்றி சென்று நான்கு வழிச்சாலை அடைய வேண்டியுள்ளது. அதேபோல கிராமங்களை விட்டு வெளியேறவும் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் மருத்துவ தேவை மற்றும் வேலைக்கு செல்லும் மக்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பாதிக்கப்படுவதாக அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நான்கு வழிச்சாலை அமைக்க விசாய நிலங்களை வழங்கிய எங்களது கிராமங்களே அந்த சாலையை பயன்படுத்தமுடியவில்லை என்றால் எப்படி என்று வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று (நவம்பர் 20) ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போரட்டத்திற்கும் பின்பும் இணைப்பு சாலை அமைக்கப்படாவிட்டால் வரக்கூடிய தேர்தலை புறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறங்கள்... மக்கள் சொல்லும் புதிய காரணம்?