தேனி மாவட்டத்தில் இதுவரை 200 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 125 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியுள்ள 73 பேர் தேனி, பெரியகுளம், கம்பம், ஓடைப்பட்டி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று புதிதாக மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்துவரும் 52 வயதுடைய நபர், சென்னையில் படித்துவரும் தனது மகனை அழைத்து வருவதற்காக வாடகைக் காரில் கடந்த சில நாள்களுக்கு முன் சென்று வந்துள்ளார்.
இதனையடுத்து சென்னையிலிருந்து ஊருக்குத் திரும்பிய தந்தை, மகன் இருவருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர்கள் போடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டனர். பரிசோதனை முடிவில் இருவருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதேசமயம் இவர்களுடன் சென்னை சென்று வந்த 34 வயதுடைய வாடகைக் கார் ஓட்டுநருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன.