கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து பார்களும் அடைக்கப்பட்டுள்ளன. மதுபானம் கிடைக்காத விரக்தியில் சிலர் கள்ளச்சாரயம் அருந்த ஆரம்பித்துவிட்டனர். இதனைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிறப்பாறை கிராமத்தில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் சிலர் சாராயம் காய்ச்சுவதைக் கண்டனர்.
அந்த இடத்தைச் சுற்றிவளைத்த காவல் துறையினர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊறல் பானைகளைக் கைப்பற்றினர். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சிய சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த மொக்கப்பாண்டி, ராம்குமார், மனோஜ், பாண்டி, பாலமுருகன், ஜெயசீலன் ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.
இதேபோல் கருப்பையாபுரம் கிராமத்திலுள்ள தனியார் தோட்டத்தில் சிலர் விற்பனைக்காக கள்ளச்சாரயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். காவல் துறையினர் வருவதை அறிந்த மச்சக்காளை, தினேஷ், ஈஸ்வரன் ஆகிய மூன்று பேர் தப்பியோடினர். பின்னர் அங்கிருந்த கருப்பையா, பவுன்ராஜ், பிச்சைமணி, சாமிநாதன், அழகுமலை உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து, 3 லிட்டர் கள்ளச்சாராயத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.