அன்புடையீர்,
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் யானைகள் பேசுகிறோம். இதுவரை உலகில் நாங்கள் 24 இனங்கள் வாழ்ந்துவந்தோம். ஆனால் தற்போது அவை அனைத்தும் குறைந்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய வகை என இரண்டு இனங்கள் மட்டுமே இருக்கிறோம். எங்களது நண்பர்களான தெற்காசிய யானைகள் தற்போது 50 ஆயிரம்வரை மட்டுமே உயிருடன் இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 25ஆயிரம் யானைகள் உள்ளதாக சில ஆய்வுகளும் கூறுகின்றன.
இந்தியாவை பொறுத்தவரையில் தெற்காசிய யானைகளின் வாழ்விடமாக இருப்பது எங்களது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மட்டுமே. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய பகுதிகளில் மட்டுமே நாங்கள் வாழ்வதற்கான சூழல் இயல்பாகவே அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோள பகுதியாக நீலகிரி உள்ளது. ஆனைமலை, அமைதிப் பள்ளத்தாக்கு, பெரியார் வனப்பகுதி (கேரளா), மேகமலை, ஶ்ரீவில்லிப்புத்தூர் என பல்வேறு பகுதிகளிலும், கிழக்குக் குன்று மலைப்பகுதிகளிலும் நாங்கள் வாழ ஏதுவான சூழல் இருந்துவருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களது இறப்பு பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. இது குறித்து கோவையை சார்ந்த சமூக ஆர்வலர்கள், ’கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 1995ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை ரயில் மோதி, மின்வேலியில் சிக்கி, இன்னும் பல்வேறு காரணங்களால் 100க்கும் அதிகமான யானைகள் உயிரிழந்துள்ளன’ என்கின்றர். இதற்கு முக்கிய காரணம் எங்களுக்கு எங்களது தாய்வீடான வனப்பகுதியில் தேவையான உணவு கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் உணவு தேடி உங்கள் ஊருக்குள் வரவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. ஆனால், ஊருக்குள் வரும்போது எங்களை விரட்ட துடிக்கும் நீங்கள் எங்களது வழித்தடங்களை ஆக்கிரமிப்பதை சத்தமில்லாமல் மறைக்கிறீர்கள்.
நாங்கள் சராசரியாக 60 முதல் 70 ஆண்டுகள்வரை உயிர் வாழ்கிறோம். எங்களுக்கு தினசரி 200 முதல் 250 கிலோவரை உணவு தேவைப்படுகிறது. எனவே, ஒரு நாளில் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை உணவைத் தேடுவதிலேயே செலவிடுகிறோம். ஒரு நாளைக்கு 100 முதல் 200 லிட்டர் தண்ணீர்வரை தேவைப்படுவதால் நாங்கள் வனப்பகுதியிலிருந்து உணவுக்காக உங்கள் ஊருக்குள்வருகிறோம். இந்த சூழலில்தான் எங்களுக்கும் உங்களுக்குமான மோதல் நடைபெறுகிறது. இதனைத் தடுக்க வனத்துறையினர் எங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவைகளை வனப்பகுதிக்குள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
காட்டில், நாங்கள் விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பரப்புவதால் மரங்கள், செடி, கொடிகள் அதிகளவு வளர்ந்து, சோலைக் காடுகள் உருவாகக் காரணமாகின்றோம். காட்டில் பல்லுயிரினப் பெருக்கத்துக்கும் நாங்கள் வழிவகை செய்கிறோம். நாங்கள் பல கிலோமீட்டர் காட்டில் நடந்துசெல்வதால், புதிய வழிப்பாதைகளையும் உருவாக்குகின்றோம். எங்களது தும்பிக்கை மூலம் பூமிக்கடியில் இருக்கும் ஊற்றுத் தண்ணீரை எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும். எங்களுக்கு கேட்கும் திறன், நினைவாற்றல் அதிகளவில் உண்டு. நாங்கள் எந்த வகையிலும் உங்களுக்கு இடையூறாக இருக்க எண்ணியதில்லை. எங்கள் வழியில் குறுக்கிட்டவர்களும், எங்களை சீண்டியவர்களுமே இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாங்கள் உயிர்வாழ ஏதுவான சூழலை நீங்கள் அமைத்துக்கொடுத்தால் எங்களால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் தடுப்போம்.
எங்களை பாதிப்பிற்குள்ளாக்கும் காரணிகள் சிலவற்றையும் இக்கடிதத்தில் இணைத்துள்ளோம். இவற்றை கருத்தில்கொண்டு எங்களை பாதுகாத்து வாழ வழி செய்யுமாறு உரிமையுடன் கேட்கிறோம்.
எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காரணிகள்:
- கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு வனப்பகுதிகளில் புதிய குவாரிகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவையை பொறுத்தவரை மலையை ஒட்டிய வனப்பகுதிகளில் செங்கல் சூளைகளுக்காக அதிகளவில் செம்மண் எடுக்கப்பட்டுவருகிறது.
- வனநிலங்களை ஒட்டி மலைப்பகுதிகளில் பயிர்சாகுபடி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
- யானைகளின் வலசை பாதைகளில் சட்டத்திற்கு புறம்பாக புதிய கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
- தேக்கு, யூக்கலிப்டீஸ் போன்ற பறவைகள், வனவிலங்குகளுக்கு பயன்படாத மரங்கள் அதிகமாக நடப்பட்டுள்ளன.
- தனியார் வனச்சட்டத்தின் கீழ் ஏராளமான நிலங்கள் எஸ்டேட் பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில எஸ்டேட்கள் தொடர்ந்து வனவிலங்குகளின் வாழ்விடத்தினை பாதிக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.
- வனப்பகுதிகளின் எல்லைகளில் ரயில்வே தண்டவாளங்கள், புற வழிச்சாலைகள் அமைப்பது.
- அலங்காரப் பொருட்களுக்காக எங்களை வேட்டையாடுவது.
இவை அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டால் மட்டுமே காடுகளின் வளத்தை அதிகரித்து, மக்களை காக்கும் எங்களையும் காப்பாற்ற முடியும். எங்களை பாதுகாக்க ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் இக்கடிதத்தை எழுதுகிறோம். ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள், ’காடுகளை உருவாக்க நீங்கள் உழைக்க வேண்டும்; ஆனால் நாங்கள் வாழ்ந்தாலே போதும் காடுகள் செழிப்போடு இருக்கும்’.
இப்படிக்கு,
யானைகள்