பொள்ளாச்சியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ரூபினி பிரியா (29). இவர் கடந்த சில ஆண்டுகளாக நீலகிரி, பொள்ளாச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாஸ், கிருபை, அன்னை என தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி அதன்மூலம் கடன் வழங்கப்படும் எனக் கூறிவந்துள்ளார்.
இந்த நிறுவனங்கள் மூலமாக ஐந்து லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கித் தரப்படும் என்று கூறி ரூபினி பிரியா, அதற்காக முன்பணத்தை முகவர்கள் மூலம் வாங்கியுள்ளார். குறிப்பாக வீடு கட்டவும் திருமணம் செய்யவும் தேவையான கடன் உதவி வழங்கப்படும் என்று கூறி ஒவ்வொருவரிடமும் தலா ரூ.40 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை பணம் பெற்றுள்ளார்.
முன்பணத்தை வாங்கிய பின் அனைவரையும் தொடர்ந்து அலைகழித்தும் உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடன் பெறுவதற்காக ரூ.18 லட்சம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்துள்ளனர். அதேபோல கோவை, திருப்பூர், சென்னை, பொள்ளாச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர்களிடம் பலகோடி ரூபாய் வசூல் செய்து ஏமாற்றிவந்துள்ளார்.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சிலர் கடந்த மாதம் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் அளித்தனர். இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமையிலான காவல் துறையினர் ரூபினி பிரியாவைத் தேடினர்.
இதனிடையே நேற்று பொள்ளாச்சியில் பதுங்கியிருந்த அவரை கைப்பேசி சமிக்ஞை (செல்போன் சிக்னல்) உதவியுடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர் உதகையில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வசூல் செய்த பணத்தைக் கொண்டு அவரது கூட்டாளிகளான சிவா, கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோருடன் பல்வேறு ஊர்களுக்குச் சென்று ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்துவந்தது தெரியவந்தது.
இதில் கார்த்திக், வெங்கடேஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். சிவா வேறு ஒரு குற்ற வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரூபினி பிரியா உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.