நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா, நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட தேவாலா அட்டி, வாளவயல், செத்த கொல்லி, சாமியார் காலனி, வாளமூலை, புஞ்சை மூலை கிராமங்களில் கடந்த சில நாள்களாக இரண்டு காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு (மே.12) வாளவயல் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழக குடியிருப்பு பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளி பூங்கொடி என்ற பெண்ணை காட்டு யானை தாக்கியதில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர், காட்டு யானையை விரட்டாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வனத் துறையினரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்க முயன்றனர். ஆனால், பொதுமக்கள் உடலை எடுக்க அனுமதிக்காமல் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். தொடர்ந்து அப்பெண்ணின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.