நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்த நிலையில், வனப்பகுதிகள் பசுமை நிறைந்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த 10 நாட்களாகக் குட்டியுடன் கூடிய 10 காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடிச் சுற்றித் திரிந்து வருகிறது.
குறிப்பாக, குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் புதுக்காடு, கோழிக்கரை, குரும்பாடி மரப்பாலாம், காட்டேரி பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுள்ள காட்டு யானைக்கூட்டங்கள், அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வரத்தொடங்கி உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்தாலும் அவர்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. அவ்வப்போது, காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும் அவைகள் வனப்பகுதிக்குச் செல்லாமல் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியிலேயே சுற்றித் திரிகின்றன. மேலும், தற்போது மேக மூட்டம் அதிகமாகக் காணப்படுவதாலும் யானையின் நடமாட்டங்களைக் கண்டறிய முடியாமல் விரட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (ஜன.07) இரவு குன்னூர் அருகே உள்ள நான்சச் அரசு உதவி பெறும் பள்ளியின் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த 8 காட்டுயானைகள். அங்கிருந்த பாக்கு மரங்களைச் சேதப்படுத்தி, பள்ளியின் கதவுகளை உடைத்து அரிசி மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருட்களைச் சூறையாடியது. இதனால், பள்ளி வளாகமே போர்க்களம் போல் காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து, பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்குச் சென்று வர வனத்துறையினர் தனிக்குழு அமைத்து யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியே வெளியே செல்ல வேண்டாம் என்றும், யானை கூட்டத்தை கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும், யானை கூட்டம் விரைவில் வனப்பகுதியில் விரட்டப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: 6.64 லட்சம் கோடி முதலீடுகள்; 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!