நீலகிரி: பெண்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில் காட்டு யானைப் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ளது வாழைத்தோட்ட கிராமம். இந்த கிராமம் முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது. இச்சூழலில், நேற்று (நவ.6) வாழைத்தோட்ட கிராமத்திலுள்ள, 30க்கும் மேற்பட்ட பெண்கள், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, பெண்கள் வேலை செய்யும் இடத்திற்குள் நுழைந்தது. இதனைக் கண்ட பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
சிறிது நேரம் அங்கேயே சுற்றித் திரிந்து மக்களை பார்த்த காட்டு யானை, யாருக்கும் எவ்வித இடையூறும் செய்யாமல் சாலையைக் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.