நீலகிரி: குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்து நடந்தது. இதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.
விபத்தின்போது மீட்புப் பணிக்கு உதவிய நஞ்சப்பா சத்திரம் கிராம மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடந்த 13ஆம் தேதி வருகைதந்த தென்பிராந்திய தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் அருண் கிராம மக்களுக்கு மருத்துவ முகாம் ஓராண்டிற்கு நடத்த அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ராணுவப் பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் ராஜேஸ்வர் சிங், ராணுவ மருத்துவமனை தலைவர் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது. கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.
கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், "தளபதி அருண் அளித்த வாக்குறுதியின்படி இன்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டுவருகிறது. விபத்தின்போது உதவிய கிராம மக்களுக்கு இதன்மூலம் நன்றி தெரிவிக்கும்விதமாக இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இங்குள்ள மக்கள் தங்களது கதவுகளையும், இதயங்களையும் திறந்தேவைத்துள்ளனர். தற்போது மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் உடல்நிலை விவரங்கள் அறியப்பட்டு வரும் மருத்துவ முகாம்களில் அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் பஞ்சர் போடும்போது டயர் வெடித்து ஒருவர் உயிரிழப்பு: சிசிடிவி வெளியீடு