நீலகிரி மாவட்டம் கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பகுதியில் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடி உள்ளது. கேரளா-கர்நாடக எல்லைப் பகுதியான இந்த சோதனைச்சாவடி வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள், சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்த வழியாக வந்து செல்லும் வாகனங்களில் சோதனைச் சாவடியில் பணியில் உள்ளவர்கள் லஞ்சப் பணம் பெறுவதாக கிடைத்த புகாரின் பேரில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் கீதா லட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் இன்று(டிச.12) காலையில் சோதனைச் சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் தொழில்நுட்பம் ராஜசுலோசனா, உதவியாளர் சிபி ஜேகப், ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் 34 ஆயிரத்து 700 ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.