நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், தூனேரி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 29ஆம் தேதி மஞ்சூர் அருகேயுள்ள மட்டகண்டி கிராமத்தில் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதில் இருவீட்டை சேர்ந்த முக்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
முகூர்த்த நேரத்தில் மணமகன், மணப்பெணிற்கு தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திடீரென, "ஒரு மணி நேரம் அனைவரும் காத்திருங்கள், என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்" என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும், என் காதலன் பார்த்திபன் வந்து தன்னை அழைத்துச் செல்வதாக கூறி மணமேடையில் இருந்து எழுந்துள்ளார். மணப்பெண்ணின் செயலால் மணமகன் செய்வதறியாமல் திகைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கு கூடியிருந்த பெரியோர்கள் மணப்பெண்ணுக்கு அறிவுரை கூறியும் கேட்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து, மணப்பெண்ணை அவரது தந்தையும் உறவினரும் காரில் அழைத்துக் கொண்டு போய் ஊட்டி லவ்டேல் பகுதியில் இறக்கிவிட்டனர். அப்போது ‘நீ அவன் கூட போனாலும் சரி செத்தாலும் சரி’ என மணப்பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
பின்னர், அந்த பெண்ணின் காதலன் வந்து அவரை அழைத்துக் கொண்டு சென்னை சென்றுவிட்டார். அந்த பெண் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தபோது, அங்கு பார்த்திபன் என்பவரை காதலித்தது தெரியவந்துள்ளது.
சினிமாவில் வருவதைப் போன்று தாலி கட்டும் கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...பால்ய மணம், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான நெருப்பு சம்பா!