நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனாகும். இந்தக் காலத்தில் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்றவைகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள 124-வது மலர் கண்காட்சிக்காக, தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுக்களை நடவு செய்யும் பணி இன்று (டிச.28) தொடங்கியது. அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா இந்த பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய சால்வியா, பென்சிடிமன், பேன்சி, லில்லியம், காஸ்மாஸ், கலிபோர்னியா பாப்பி, மேரிகோல்டு, பெட்டுனியா, டயான்தஸ், ஆஸ்டர் மற்றும் புதிய ரகங்களான அக்கீலியா,பெல்லிஸ், ஆஸ்டலிப், எரிசிமம், அல்டசிமில்லா உள்ளிட்ட 230 வகையாக மலர்களின் விதைகள் அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்டு, தாவரவியல் பூங்காவில் ஐந்து லட்சம் மலர் செடிகளின் நாற்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.
தற்போது நடவு செய்யப்படும் நாற்றுகள் கோடை சீசனுக்குள் வளர்ந்த பூத்துக் குலுங்கும். பிரிட்டனிலிருந்து நீலகிரிக்கு 14 நபர்கள் வந்துள்ளனர். இவர்களில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர்களோடு தொடர்பிலிருந்த ஒருவர் உட்பட மொத்தம் மூன்று பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. புதிய வகை கரோனா தொற்றா என்பதை கண்டறிய இவர்களுடைய ரத்த மாதிரிகள் மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவிற்கு ஆய்வுகாக அனுப்பப்பட்டுள்ளது. தற்போது மூவரும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: தங்கக் கடத்தலுக்கு உதவிய விமானநிலைய ஒப்பந்த ஊழியர் கைது!