நீலகிரி: உதகை அருகே மச்சான கோரை எனும் பகுதியில் சென்னையைச் சேர்ந்த ஒரு நபர் வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி அங்கு கடந்த சில தினங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.9) அந்தப் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கும் கட்டிடப் பணிகளுக்காக மண் அப்புறப்படுத்தும் பணியில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 15 அடி உயரம் கொண்ட மண்திட்டு பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், நான்கு பேரில் இருவர் உடனடியாக தப்பித்தனர். மீதி இருந்த இருவர் மண்ணில் புதைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், காவல் துறைக்கும் அந்தப் பகுதியில் இருந்த சக பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி மண்ணில் புதைந்து இறந்த நிலையில் இருந்த இருவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த சேட் (55), வேலு (28) ஆகிய இரு தொழிலாளர்கள் இறந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித், கோட்டாசி அலுவலர் துரைசாமி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கட்டிடம் கட்ட அனுமதி பெற்றிருந்த போதும் பாதுகாப்பான முறையில் தடுப்புச் சுவர் அமைப்பதற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:போதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞர் - தாயும் சேயும் உயிரிழப்பு