நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5ஆம் தேதியிலிருந்து ஒரு வாரம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கபட்டன. இத்துடன் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடபட்டிருந்த விவசாய நிலங்கள், நீரில் மூழ்கின. ஒரே நாளில் உதகை அருகே உள்ள அவலாஞ்சி பகுதியில் 91 செ.மீ மழை பதிவானது. இதுவே தென்னிந்தியாவில் ஒரே நாளில் பெய்த அதிக மழை பொழிவாகும்.
இயற்கை அழகுமிக்க வனப்பகுதியில் இவ்வாறு மழை பெய்ய என்ன காரணம் என்று இந்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு மையத்தின் விஞ்ஞானி மணிவண்ணன் கூறுகையில், ”அவலாஞ்சி பகுதியில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்துள்ளது. தென்னிந்தியாவில் இதுவரை ஒரே நாளில் பெய்யாத மழை இங்கு பெய்துள்ளது. இதற்கு காரணம் வளிமண்டலத்தில் ஏற்படும் அதிகப்படியான ஈரப்பதம்தான் காரணம். மேற்புரத்தில் ஒரே இடத்தில் நின்று காற்று வீசுவதாலும் அதிக மழை பெய்துள்ளது.
இதுபோன்று ஒரே நாளில் மழை தென்னிந்தியாவில் பெய்தது இல்லை. ஆனால் இதுபோல் இமாச்சலாப் பிரதேசம் மற்றும் இமாலயாவில் மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு நாளில் இதுபோன்று மழை பெய்ததால் மழை நீரை சேகரிக்க முடிவதில்லை. எனவே விவசாய நிலங்கள், பொது நிலங்களில் குட்டைகள் அமைக்கபட்டு மழை நீரை சேகரிக்க வேண்டும். அதோடு நீர்நிலைகளை ஆழப்படுத்தி அதன் உண்மையான ஆழத்திற்கு எடுத்துவர வேண்டும்.
கனமழையால் பல்லாயிரகணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கபட்டுள்ளன. இனிமேல் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க மண்ணை பாரமரித்து விவசாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் மண்ணரிப்பை தடுப்பதுடன், வெள்ள பாதிப்புகளையும் தடுக்க முடியும். வடகிழக்கு பருவ மழை நீலகிரி மாவட்டத்தில் சராசரியாக பெய்யும். குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மண்சரிவு, நிலச்சரிவை தவிர்க்க சாலையோரங்களில் மண்சரிவு, நிலச்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து தாவரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் மண் அரிப்பை தடுக்க முடியும்” என்றார்.