தமிழ்நாட்டின் மிகப் பழமையான மலைத்தொடர்களுள் ஒன்று நீலகிரி. இது கேரளா, தமிழ்நாடு ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் எல்லைப்பகுதியாக இருக்கிறது. இயற்கை அரணுடன் சுற்றுலாத் தலமாக காணப்படும் நீலகிரியில் ஆண்டுக்கு 30 லட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
இவ்விடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் வாகனங்களைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் செல்லும் வேன்களில் 12 நபர்களை மட்டுமே அழைத்து செல்ல போக்குவரத்துத் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், 12 நபர்களை மட்டும் ஏற்றிச் சென்றால் சுற்றுலா வேன்களை இயக்கும் ஓட்டுநர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.
எனவே, அவர்களது வருமானத்தை உயர்த்தும் வகையில் சுற்றுலா வேன்களில் 12 நபர்களுக்கு பதிலாக 18 நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கக்கோரி இன்று முதல் எட்டு நாட்களுக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து மத்திய பேருந்து நிலையம் அருகே வேன்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், மாநிலத்தில் முதற்கட்டமாக உதகையில் தொடங்கியுள்ள இந்தப் போராட்டம் நாளை முதல் பிற மாவட்டங்களிலும் நடைபெறும் என சுற்றுலா வாகன ஒட்டுநர்கள் சங்கத் தலைவர் கோவரதன் தெரிவித்தார்.