நீலகிரி: குன்னூர் அடுத்த சின்ன குன்னூர் பகுதியில் மூன்று புலி குட்டிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரி கௌதம் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் சின்ன குன்னூர் பகுதியில் பெண் புலி ஒன்று குட்டியை ஈன்றெடுக்கும் சூழலில் சுற்றி வந்துள்ளது. இதனை இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் குழு அமைத்து பெண் புலியை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள புதரில் ஒரு குட்டி புலி இறந்து கிடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் தாய் புலியை தேடி வந்த நிலையில், மேலும் இரண்டு குட்டிப் புலிகள் இறந்து கிடந்ததும், ஒரு குட்டி உயிருடன் இருந்ததையும் கண்டறிந்தனர். பின்னர், உடனடியாக மீட்கப்பட்ட அந்த குட்டிப் புலிக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மூன்று குட்டிப்புலிகள் இறந்தற்கான காரணம் குறித்து கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை நடைபெறவுள்ளது.
அதன் பின்னரே புலி குட்டிகள் இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்று வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தாய் புலியை தேடும் பணியில் வனத்துறையின் தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.