நீலகிரி மாவட்டம், கொலக்கம்பை பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் 8 வயது வடமாநில சிறுமி கடந்த மாதம் காணாமல் போனார். இதுகுறித்து கொலக்கம்பை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மாயமான சிறுமியைக் கண்டு பிடிக்க மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 2 டிஎஸ்பிக்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தேடி வருகின்றனர்.
குறிப்பாக சிறுமி காணாமல் போன எஸ்டேட் சுற்றுவட்டாரப் பகுதியில் 150 காவலர்களைக் கொண்டு 3 முறை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சிறுமியை வனவிலங்கு அடித்துக் கொன்றதற்கான அடையாளம் தெரியவில்லை. இதனையடுத்து சிறுமியை யாரேனும் கடத்திச் சென்றார்களா என்ற சந்தேகத்தில் சிசிடிவி கேமரா காட்சியை சோதனை செய்தனர்.
அதிலும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, "சிறுமி காணாமல் போன வழக்கை விசாரிக்க மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 8 தனிப்படைகள் அமைத்து சிறுமியைத் தேடி வருகிறோம். சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த அசோக் பகத் என்ற வடமாநிலத் தொழிலாளியிடம் விசாரித்தோம். அவருக்கு இதில் சம்பந்தமில்லை.
சிறுமி மாயமான சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கபடும்" என்றார்.
இதையும் படிங்க: கண்மாயில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழப்பு