தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலா மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. ஆண்டுதோறும் இம்மாவட்டத்திலுள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாத் தலங்களைக் காண 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த சில நாள்களாக கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. இதனிடையே நேற்று அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். குறிப்பாக 170 ஆண்டுகளைக் கடந்து சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த அரசு தாவரவியல் பூங்கா முதன்முறையாக மூடப்பட்டுள்ளது.
இதனால் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி களைகட்டும் தாவரவியல் பூங்கா தற்போது யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
உதகை மார்கெட் பகுதிகளில் நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அலுவலர்கள் அங்குள்ள வியாபாரிகள், கடை உரிமையாளர்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று அறிவுறுத்திய அவர்கள், எவ்வாறு கைகழுவ வேண்டும் என்பதனையும் செய்து காண்பித்தனர்.
மேலும் மார்கெட் கடைகளைத் தூய்மையாக வைக்க வேண்டும் எனவும், நல்ல காய்கறிகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வெறிச்சோடிய ஒகேனக்கல்