நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக யானை வழித்தடங்கள் அழிக்கப்பட்டு சாலைகள், காட்டேஜ்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில் உள்ள யானைகள், வடுகன் தோட்டம் இச்சிமரம் வழித்தடம் வழியாகச் சாலையை கடந்து உணவு, தண்ணீரைத் தேடிச் செல்கின்றன.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறையினரே யானை வழித்தடத்தை அழித்து, விரிவாக்கப் பணியைத் தொடங்கினர். இதில் அங்கிருந்த வனத் துறையின் யானை வழித்தடப் பலகையையும் அகற்றினர்.
இதனைத் தொடர்ந்து வனத் துறையினர் அப்பகுதியில் ஆய்வுசெய்து, அகற்றப்பட்ட பலகைககளை வைத்ததுடன், யானை வழித்தடத்தில் பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறைக்குத் தடைவிதித்தனர்.
இதனால் யானை வழித்தடமுள்ள இடங்களை விட்டு மற்ற இடங்களில் விரிவாக்கப் பணியை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினர் ஒப்புக்கொண்டனர்.
ஆனால், தற்போது 6 மீட்டர் யானைகள் செல்ல இடம் விடப்பட்டுள்ளது. 6 மீட்டர் இடம் விட்டாலும் யானைகள் வந்து செல்வதில் சிரமம் உள்ளதால், தடுப்புச் சுவரும் உயரமாக அமைக்கப்பட்டுவருகிறது.
யானைகள் தண்ணீர் குடிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதால், இச்சிமரம் என்ற இடத்தில் மட்டும் விரிவுப்படுத்தும் திட்டத்தைக் கைவிட்டு யானைகள் தடையின்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காயங்களுடன் உயிரிழந்த யானையின் உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் இல்லை!