நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பழமைவாய்ந்த சிம்ஸ் பூங்காவை நவீனப்படுத்த திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தோட்டக்கலைத் துறை மூலமாக பராமரித்து வரக்கூடிய பண்ணைகள், பூங்காக்களில் இந்தக் கரோனா காலகட்டத்தில் கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டால், பூங்காக்கள் திறந்துவிடும்போது மிகவும் வசதியாக இருக்கும்.
இதற்காக தோட்டக்கலை இயக்குநரின் அறிவுறுத்தலின்பேரில் இங்கு ஆய்வு மேற்கொண்டேன். இதில் சிம்ஸ் பூங்காவில் உள்ள நுழைவு வாயில் மிகவும் சிறியதாக உள்ளது. பெரிய நுழைவு வாயில் அமைக்கப்படும். தோட்டக்கலைத் துறை சார்பில் தயாரிக்கப்படும் ஜாம், ஜெல்லி, ஊறுகாய், பழவியல் பூங்காவில் விளையும் பழங்கள் உள்ளிட்டவற்றை விற்க பூங்காவைச் சுற்றி கடைகள் அமைக்கப்படும்.
பூங்காவில் உள்ள பகுதிகளில் நடைபாதைகள் புனரமைக்கப்படும். இதுபோன்ற பணிகள் மேற்கொள்ள திட்ட மதிப்பீடு செய்து அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ளப்படும்" எனக் கூறினார்.
இந்த ஆய்வில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணி, உதவி இயக்குநர் பெபிதா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.