நீலகிரி மாவட்டம் பந்தலூர் அட்டிப் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகள் தர்ஷினி(19). இவர் கூடலூர் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பிரிவில் இரண்டாமாண்டு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்ற தர்ஷினி, மதியம் வகுப்பு முடிந்ததையடுத்து ஆமைக்குளம் பகுதியிலுள்ள தனது சித்தி வீட்டிற்கு தோழிகளுடன் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர், 'பாண்டியர் புன்னம் புழா' ஆற்றின் கரையோரம் தனது கை கால்களைக் கழுவும் போது, தடுமாறி ஆற்றில் விழுந்தார். கடந்த ஐந்து நாட்களாக நீலகிரியில் பெய்த கனமழையால் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் ஓடியதால், நீரின் வேகத்தில் அவர் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு ஒருமணி நேரமாக தர்ஷினியைத் தேடி வந்தனர். பின்னர், புளியம்பாறை பகுதியில் அவரது உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உடலை உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். காலையில் கல்லூரிச் சென்றுவிட்டு, மதியம் ஆற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழந்த, இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மலைப்பாதையில் விபத்து - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 22 மாணவர்கள்