நீலகிரி மாவட்டத்தில், பொதுவாக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய பனிப்பொழிவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது.
தற்போது, இந்த பனிக்காலம் முடிவடைந்து வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வனப்பகுதியில் உள்ள புற்கள், செடி, கொடிகள் வறண்டு வருகின்றன. இதனால், வனப்பகுதி பசுமையிழந்து எளிதில் தீப்பற்றக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தக் காட்டுத் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக முதுமலை புலிகள் காப்பகத்தில் தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீ ஏற்பட்டால் அதனை எவ்வாறு நாம் எதிர்கொள்வது என்பது குறித்தும், தமிழ்நாடு உயர் பயிற்சியகம், முதுமலை புலிகள் காப்பகம் இணைந்து சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது.
இந்தப் பயிற்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 150 வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியில் காட்டுத்தீ எவ்வாறு ஏற்படுகிறது, அதனைக் கட்டுபடுத்துவது, பரவாமல் தடுப்பது, தீயை அணைக்க எளிதில் கையாளும் உபகரணங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
இந்தப் பயிற்சி வருகின்ற 7ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி