நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தாண்டு கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக கோடை விழா வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த குளுகுளு சீசனை அனுபவிக்கவும் மலர் கண்காட்சியைக் காணவும் லட்சக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். கேரளா, கர்நாடக ஆகிய வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர்.
கோடை சீசனை கண்டுகளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் இன்று முதல் மேட்டுப்பாளையம் வழியாக உதகை வரும் வாகனங்கள் அனைத்தும் பர்லியார், குன்னூர் வழியாக செல்ல வேண்டும் என்றும் அதேபோல் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக செல்ல வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகபிரியா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரும் அனைத்து லாரிகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோத்தகிரி வழியாக இயக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பின்னர், லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் காவல் துறையினருக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.