நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிங்காரா வன பகுதிக்கு கடந்த 2012ஆம் ஆண்டு ஆண் காட்டு யானை ஒன்று தும்பிக்கையில் பலத்த காயத்துடன் வந்தது. அந்த யானையைக் கண்ட சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து யானையின் தும்பிக்கையில் ஏற்பட்டிருந்த காயம் குணமடைய பழங்களில் மருந்து, மாத்திரைகள் வைத்து கொடுக்கப்பட்டது.
அந்த காட்டு யானை பொதுமக்களுடன் சகஜமாக பழகியதால் பிரபல கால்பந்து வீரர் ரிவால்டோவின் பெயர் வைக்கப்பட்டது. தொடக்கத்தில் அமைதியாக இருந்த ரிவால்டோ கடந்த சில மாதங்களாக விவசாய நிலம், குடியிருப்புக்குள் நுழைந்தது.
இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே ரிவால்டோவின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுவாச பிரச்னையும் இருந்ததால், அதற்கு சிகிச்சை அளிக்க புலிகள் காப்பக வனத்துறையினர் முடிவு செய்தனர்.
சுவாச பிரச்னை இருந்ததால் ரிவால்டோவுக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 3 மாதங்களுக்கு முன்பு ரிவால்டோவை முதுமலைக்கு நடக்க வைத்து அழைத்து செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த திட்டம் தோல்வி அடைந்தது. பின்னர் வாழைத்தோட்டம் பகுதியிலேயே மரக்கூண்டு அமைக்கப்பட்டது.
மரக்கூண்டுக்குள் கடந்த ஒரு வார காலமாக ரிவால்டோவுக்கு பிடித்த உணவு பொருட்கள் வைக்கப்பட்டது. இன்று (மே.5) காலை ரிவால்டோ யானை மரக்கூண்டிற்குள் சிக்கியதையடுத்து வனத்துறையினர் யானை கூண்டிற்குள் வைத்து அடைத்தனர்.
இதையும் படிங்க: யானை வழித்தடங்களில் இல்லாத செங்கல் சூளைகளை இயக்க அனுமதி கோரி மனு