நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ரெயிலி காம்பவுண்ட் பகுதியில் 2015ஆம் ஆண்டு 10 லட்சம் ரூபாய் செலவில் அங்குள்ள சிறுவர்-சிறுமியர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது. இந்தப் பூங்காவில் நடைபயிற்சி, உடற்பயிற்சி மற்றும் முதியோர்கள் ஓய்வெடுக்க புல் தரைகள், சிறுவர்-சிறுமியர் விளையாடும் வகையில் உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன.
தற்போது பராமரிப்பின்றி சிறுவர்கள் விளையாடும் உபகரணங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. மேலும் நடைபாதை முழுவதும் களைச்செடிகள், பார்த்தீனியம் செடிகளால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பார்த்தீனியம் செடிகள் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களை ஏற்படுத்துவதால் அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு இது தொடர்பாக புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதே நிலை தொடர்வதைத் தடுத்து, மாவட்ட ஆட்சியர் உடனடியாக பூங்காவை பராமரிக்க ஏற்பாடு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கைஎழுந்துள்ளது.