நீலகிரி மாவட்டம் உதகை, கொடநாடு, குன்னூர், பர்லியார், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் அரியவகை பறவைகளின் வலசை பயணம் தற்போது தொடங்கியுள்ளது. கிங்பிஷர், நீலகிரி லாஃபிங் டிரஸ், ஆரஞ்சு பிளாக் டிராங்கோ, நீலகிரி பிளை கேட்சர், ரெட் இவெண்ட் புல் புல், பே ஹெட்டட் பீ ஈட்டர், ஜங்கிள் பாபுலர், கிரே வேக் டெயில், பபுள் பின்ச் உள்பட 182 வகையான அரிய பறவைகள் வலசை பயணத்தை தொடங்கியுள்ளதால் பறவைகளை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பார்க்க முடிகிறது.
குறிப்பாக குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம், கொடநாடு காட்சி முனை, கோத்தகிரி லாங் வுட் சோலை, பர்லியார், குன்னூர் டால்ஃபின்ஸ் நோஸ் காட்சி முனை ஆகிய பகுதிகளிலிருந்து பறவைகள் இடம் பெயர்கின்றன.
மேலும் இந்த அரிய வகை பறவைகள் குறித்து சுற்றுலா பயணிகளிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து சுற்றுலா தலங்களிலும் பறவைகளின் புகைப்படங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகளை வைக்க சுற்றுலா துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோாிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.