நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் ரிசார்ட்ஸ் (உயர் தர சொகுசு விடுதிகள்), கட்டடங்கள் கட்டப்பட்டு இயங்குவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள உயர் தர சொகுசு விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்கள் குறித்த அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள உயர் தர சொகுசு விடுதிகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு சீல்வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு சீல்வைக்கப்பட்டது.
இந்நிலையில், சீல்வைக்கப்பட்ட கட்டடங்கள் மீண்டும் இயங்குவதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தரப்பில் புகார் மனு தாக்கல்செய்யப்பட்டது.
அதில், உயர் தர சொகுசு விடுதிகள், கட்டடங்கள் யானை வழித்தடத்தில் இயங்குவதைத் தடுக்கும் வண்ணம் அவற்றை அகற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்தக் குழு சட்டவிரோதமாக இயங்கும் கட்டடங்களை முழுமையாக அகற்றவும் அரசின் அனுமதியோடு இயங்கிவரும் கட்டடங்களை அகற்றும்பொழுது அதற்குரிய இழப்பீடு வழங்க பரிந்துரைக்கும் பணியும் செய்யும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருந்தது.
எனவே, அக்குழுவில் இடம் பெறுவோர் குறித்த விவரங்களை இன்று தாக்கல்செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக ஒருநாள் அவகாசம் வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பில் கோரப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் ஒருநாள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.
யானைகள் வழித்தடம் என்பது முழுக்க முழுக்க யானைகளுக்கு சொந்தமானதே தவிர அங்கு கட்டடங்கள் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் முன்பு கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: யானைகள் புடைசூழ பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி: சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பு