நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திசெய்யும் முக்கிய அணையாக ’ரேலியா அணை’ இருந்துவருகிறது.
43.5 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையிலிருந்து, குன்னூர் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. வறட்சிக் காலங்களில் தண்ணீர் அளவு 12 அடிக்கும் குறைவாகவே இருந்தது. இதனால், மக்கள் தண்ணீரை தேடி பல கி.மீ தொலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து வாகனங்கள் மூலமாகவும், தள்ளுவண்டி மூலமாகவும் நீரை கொண்டு வந்து பயன்படுத்தி வந்தனர்.
நகராட்சி சார்பில் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், மக்கள் குடிநீரை விலைகொடுத்து வாங்கி வரும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தற்போது மழைபெய்து வந்ததால், ரேலியா அணையின் நீர் மட்டம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இருப்பினும், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சியில் முறையான கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. இதனால் தண்ணீர் இருந்தும் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நகராட்சி சார்பில் தண்ணீர் விநியோகித்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களாக அணை நிரம்பி தண்ணீர் வீணாகிவருகிறது. இரண்டு தினங்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விநியோகம் செய்யவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'சில்லஹல்லா நீர்மின்' திட்டத்திற்கு 15 கிராம மக்கள் எதிர்ப்பு!