குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளுக்கு ரேலியா அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகராட்சியால், முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததாலும், ஆங்காங்கே குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி செல்வதாலும் மக்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், 18 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சராசரியாக 36 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 26 லட்சம் லிட்டர் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அதுவும் பல இடங்களில் வீணாகி செல்வதால், மக்களுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறார்கள். இதனால், ரேலியா அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், குன்னூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.