நீலகிரி மாவட்டம், குன்னுார் நகரில் மட்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இம்மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை இருந்து வருகிறது. 43.5 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 10 அடி மட்டுமே உள்ளது. இந்த நீர் இரண்டு நாட்களுக்கு மட்டும் பயன்படும் என்பதால் குன்னுார் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
அப்பகுதியில் உள்ள மற்ற சிறு தடுப்பணைகள் தூர்வாரப்படாமல் உள்ளதாலும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் நீரைத் தேடி நீண்ட தொலைவில் உள்ள நீரோடைகளிலிருந்து வாகனங்கள் மூலமாகக் கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர். அணையில் நீர் இருக்கும் போதே மாதத்திற்கு 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில் நகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது நீர் இல்லாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரு குடம் ரூ.15 எனவும், வாகனங்கள் மூலம் ஆயிரம் லிட்டருக்கு ரூ.750 முதல் ஆயிரம் ரூபாய் வரையில் இடத்திற்குத் தகுந்தவாறு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு உள்ளதால் மேலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாய நிலையில் உள்ளது. குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தாலும், ரேலியா அணை உள்ள பகுதியில் மழை பெய்யாததது ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.