நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ரேலியா அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கோடை சீசனில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குன்னூரில் வரும் மே மாதத்தில் நடைபெறும் கோடை விழாக்களின் போது லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். இங்குள்ள சுற்றுலாத் தலங்களை சுற்று பார்த்து விட்டு செல்வர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், உள்ளுர் மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கவும் ரேலியா அணை முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ரேலியா அணையின் மொத்த கொள்ளளவான 43 அடியில் தற்போது 39 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. மேலும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் கிடைக்கும் என்பதால் வரும் மே மாதம் நடைபெறும் கோடை சீசனில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வனப்பகுதிக்குள் நிலவும் வறட்சி: முதுமலை சாலையில் திரியும் யானைகள்!