மேட்டுப்பாளையம் முதல் நீலகிரி வரை இயக்கப்படும் மலை ரயில் உலக பிரசித்தி பெற்றது. இந்த மலை ரயில் முதன்முதலில் ஆங்கிலேயரால் 1899ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்பட்டது.
ஆசியாவிலேயே 22 கிலோமீட்டர் மலைப்பாதையில் பல்சக்கரங்களைக் கொண்டு இயக்கப்படும் ஒரே மலை ரயில் என்ற பெருமையை பெற்றது இது. 208 பாலங்கள் வழியாக செல்லும், இந்த மலை ரயிலில் பயணிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம் என்பது சுற்றுலாப் பயனிகளின் ஒருமித்த கருத்து.
இதில் பயணிக்க, தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பெருவாரியாக ஆர்வம் காட்டுகின்றனர். சர்வதேச சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள இந்த ரயிலுக்கு, யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த மலை ரயிலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துவரும் நிலையில், மேலும் ஒரு ரயில் பெட்டியை இணைத்தால் அது கூடுதல் பயணிகள் பயன்பெற ஏதுவாக அமையும் என ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காடுகளை காப்பாற்றுவது குறித்து சிறப்புக் கூட்டம்