நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி மகிழ்வது வழக்கம். 14 கிராமங்களில் நடக்கும் இந்த பண்டிகையில் ஜெகதளா மற்றும் பேரகனியில் கொண்டாடும் திருவிழா சிறப்பு வாய்ந்தது.
இதில் ஜெகதளாவில் மட்டுமே கன்னி ஹெத்தையம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிகொரை, மஞ்சுதளா, மேல் பிக்கட்டி, கீழ் பிக்கட்டி ஆகிய 8 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நடத்துவார்கள்.
இந்த பண்டிகையில், ஹெத்தைக்காரர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து ஜெகதளா ஹெத்தையம்மன் கோயிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய் வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர்.
பின்னர், சுத்தகல் கோயிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். இன்று (ஜனவரி 1) காரக்கொரை மடிமனையில் நடந்த பூ குண்டம் திருவிழா, எளிமையாக கொண்டாடப்பட்டது. 11 பேர் பூ குண்டம் இறங்கி வந்த நிலையில், கரோனா காரணமாக, தலைமை பூசாரி மட்டுமே பூ குண்டம் இறங்கினார். தொடர்ந்து பெரியவர்களின் கால்களில் விழுந்து கிராம மக்கள் ஆசி பெற்றனர்.
இதையும் படிங்க: மகர விளக்கு பூஜை: சபரிமலையில் குவிந்த பக்தர்கள்!