நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுக்காவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி பத்தாம் லைன் பகுதியில் நேற்று (டிசம்பர் 13) மாலை தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 22 வயது மதிக்கத்தக்க பிரகாஷ் என்ற இளைஞரை காட்டு யானை மிதித்துக் கொன்றது. இதனை அறிந்த அவரது தந்தை ஆனந்தராஜ் மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் போது அவரையும் யானை கடுமையாக தாக்கியது. இதில் தந்தையும் உயிரிழந்தார்.
இருவரது உடல்களும் கைப்பற்றப்பட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டுச் செல்லப்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்காத வனத் துறை அலுவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராதவாறு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினர். இதனால், கேரளா செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் காட்டு யானையை விரட்ட முதுமலையிலிருந்து வசிம், பொம்மன் என்ற இரு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கோவையில் காட்டுயானை தூக்கி வீசி ஒருவர் படுகாயம்!