நீலகிரி மாவட்டம், உதகை அருகே 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் தேர்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெறும்.
அதேபோல இந்த ஆண்டிற்கான 108ஆம் ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் ஊர்வலம் இன்று நடைபெற்றது. தேரை நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து உதகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.
தேர் ஊர்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. இதன் நீட்சியாக சிறப்புப் பூஜைகள் செய்யபட்டன. அதனைத் தொடர்ந்து ஒன்று கூடிய தோடர் இன ஆண்கள் வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தவாறு தங்களது பாரம்பரிய நடனத்தை ஆடினர்.
அப்போது அவர்கள் வருகின்ற தமிழ்ப் புத்தாண்டில் நல்ல மழை பெய்ய வேண்டும், மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என தங்களது மொழியில் பாடியவாரே நடனமாடினர்.
உதகை நகரில் தோடர் இன பழங்குடியின மக்கள் ஆடிய பாரம்பரிய நடனத்தைப் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதையும் படிங்க: பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் களைகட்டிய சமத்துவ பொங்கல்