மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயிலை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. பழுது செய்யும் பணிகள் சரியாக செய்யப்பட்டாலும் பழுதை முழுமையாக சீர்படுத்த முடியவில்லை.
எனவே, குன்னூர் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்து மாற்று இன்ஜின் வரவழைக்கப்பட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு ரயில் கிளம்பியது.
மாற்று இன்ஜின் வர தாமதம் ஆனதால் சுற்றுலாப் பயணிகள் உணவு, தண்ணீரில்லாமல் தவித்தனர்.
கோடை சீசன் தொடங்கிய நிலையில் அதிக சுற்றுலாப் பயணிகள் வரும் நேரத்தில் இதுபோன்று பிரச்னை இல்லாமல், மலை ரயிலை பழுதில்லாமல் இயக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.