நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பக சரணாலயம் 680 சதுர கிலோ மீட்டர் கொண்ட வனப்பகுதியாகும். இங்கு புலி, சிறுத்தை, யானை, மான்கள், காட்டெருமை, கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகளின் வாழ்விடமாக இருக்கிறது. இந்நிலையில், சென்ற வாரம் முதுமலை புலிகள் காப்பகம் கோர் ஜோன் என்று அழைக்கபடும் 321 சதுர கிலோமீட்டர் கொண்ட வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
இந்த கணக்கெடுப்பு பணிகளில் 35 டிரான்ஸ்சர்ட் நேர்கோட்டு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கணக்கெடுக்கும் பணி துல்லியமாக நடத்தும் வகையில் மொபைல் செயலி மூலமும் ,நேரடிப் பார்வை, கால் தடயங்கள், எச்சம் உள்ளிட்ட பல்வேறு தடயங்களின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதில் தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகள், ஊர்வன பறப்பன உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. ஜூன் மூன்றாம் தேதி இப்பணிகள் முடிவடையும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.