நீலகிரி: உதகையின் மைய பகுதியில் நகராட்சி தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது.
இங்கு 1597 கடைகள் உள்ள நிலையில் 2016ஆம் ஆண்டு வாடகை மறு சீரமைப்பு செய்யபட்டது. அதனால் ஒவ்வொரு கடைகளின் வாடகையும் ஆயிரம் விழுக்காடு உயர்த்தபட்டது. வாடகை உயர்வுக்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதனை விசாரித்த உயர் நீதிமன்றம் தனி குழு அமைத்து வாடகை பாக்கி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. ஆனால் இது வரை நகராட்சி நிர்வாகம் குழு அமைக்காமல் இருப்பதாக கூறி 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் உள்ளனர்.
இதனால் 38 கோடி ரூபாய் வாடகை பாக்கி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாடகை பாக்கி வைத்துள்ள 1385 கடைகளுக்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் கடைகளுக்கு சீல் வைத்ததை கண்டித்தும், உடனடியாக சீலை அகற்றி வாடகை பிரச்சினைக்கு தீர்வு காண குழு அமைக்க கோரியும் மனத நேய மக்கள் கட்சியினர் மற்றும் வியாபாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இன்று உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.